Skip to content
Home » Blog » நம்பகமான கொலைகாரன்

நம்பகமான கொலைகாரன்

அகிரா குரசோவாவின் வாழ்க்கை வரலாற்றில் அவரது குருவைப் பற்றி ஓரிடத்தில் சொல்வார் – ‘எடிட்டிங் அறையில் அவர் ஒரு நம்பகமான கொலையாளி.’

சினிமாவுக்கு மட்டுமல்ல. எழுத்திலும் நாம் நம்பகமான கொலையாளியாக இருந்தால்தான் எழுத்தாளராக நிலைத்திருக்க முடியும்.

எடிட்டிங் என்கிற நுட்பம் ஒரு பிரதியில் என்னென்ன மாயம் செய்யும் என்று இன்று பலருக்குத் தெரியாது. முதலில் எடிட்டிங் என்றால் என்னவென்றே சரியாகத் தெரிவதில்லை.

1. எடிட்டிங் என்றால் ப்ரூஃப் பார்ப்பது
2. எடிட்டிங் என்றால் ஒற்றுப் பிழைகளைச் சரி செய்வது
3. எடிட்டிங் என்றால் பத்தி பிரிப்பது
4. எடிட்டிங் என்றால் தலைப்பு வைப்பது
5. எடிட்டிங் என்றால் நீளமான பகுதிகளைச் சுருக்குவது

இன்னும் உண்டு. நூற்றுக்கணக்கான டெஃபனிஷன்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால், துரதிருஷ்டவசமாக இவை எதுவுமே எடிட்டிங் அல்ல.

தமிழ்ச் சூழலில் யாரும் எழுதுவதை ஒரு எடிட்டரிடம் அனுப்பி எடிட் செய்து வாங்கி, பிரசுரிப்பதில்லை. பெரும்பாலான இடங்களில் பதிப்பாளர்களே எடிட்டர்களாக இருந்து மேற்சொன்ன சில்லறைப் பணிகளைச் செய்துவிடுகிறார்கள். சிறிது வசதி படைத்த பதிப்பு நிறுவனங்கள் ப்ரூஃப் ரீடர்களை வேலைக்கு வைக்கும். அவர்கள் சிறு பிழைகளைக் களைந்து தருவார்கள். அவ்வளவுதான். மற்றபடி, எழுதுபவர்கள் என்ன அனுப்பினாலும் அது உலகத்தரம்தான். கேள்வியே கிடையாது.

உண்மையில் எடிட்டிங் என்பது எழுதுவதைக் காட்டிலும் சிரமமான பணி. ஒரு எடிட்டர், ஒரே சமயத்தில் எழுதுபவனாகவும் அவனது விமரிசகனாகவும் பணியாற்ற வேண்டும். ஆக்கபூர்வமான விமரிசனம் என்று தமிழில் ஒரு மாய யதார்த்தப் பிரயோகம் இருக்கிறது. உண்மையில் அது ஒரு நல்ல எடிட்டரால் செய்யப்படுவது மட்டுமே. விமரிசகர்கள் அப்படி ஒரு நல்ல காரியம் செய்து நான் கண்டதில்லை.

நான் இருபதாண்டுக் காலம் எடிட்டராகப் பணியாற்றியிருக்கிறேன். அதில் முதல் ஏழெட்டு வருடங்களைக் கற்றுக்கொண்ட காலமாக எண்ணிக் கழித்துவிட்டாலும் மிச்ச காலம் முழுவதும் அதுதான் பணி. ஆனபோதிலும், என்னுடைய புத்தகங்களை நான் எடிட் செய்வது கிடையாது.

அபுனைவு நூல்கள் என்றால் ஆர். பார்த்தசாரதி என்றொரு எடிட்டர் இருக்கிறார். அவரிடம் தருவேன். நாவல்கள் என்றால் அதற்கும் ஓரிருவரை வைத்திருக்கிறேன். இவர்கள் என் பிரதியில் என்ன செய்கிறார்கள் என்று கவனிப்பேன். என் கவனம் மீறி நிகழ்ந்திருக்கும் தவறுகளை அவர்கள் எப்போதும் எனக்குச் சுட்டிக் காட்டுவார்கள்.

என் மொழியில் பிழை இருக்காது. எனக்கு இலக்கணம் தெரியும். என் நடையில் நீங்கள் குறை காண முடியாது. முப்பதாண்டுக் காலம் ஒரு நாள் விடாமல் எழுதிப் பழகிய கரம் என்னுடையது. வெகுஜன வாசகர்கள் – தீவிர வாசகர்கள் என்ற இரு சாராருக்கும் எழுதுபவன் என்பதால் இரு தரப்பின் தேவையும் தெரியும். கண்டெண்ட் சரியாக இருக்கும். தரவுகளுக்காக நாள் கணக்கில், மாதக் கணக்கில், சமயத்தில் ஆண்டுக் கணக்கில்கூட சலிக்காமல் உழைப்பேன்.

இவ்வளவையும் மீறி என் எழுத்தில் என்ன தவறு நிகழ்ந்துவிடும் என்றால், நிகழும்! கண்டிப்பாக அது நடக்கும். அது எழுத்தாளன் கண்ணில் படாது. ஒரு சரியான எடிட்டர் கண்ணில் மட்டும்தான் படும்.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இது ‘இறவான்’ நாவல் எழுதியபோது நடந்தது.

இறவான், மனத்தளவில் தன்னை ஒரு யூதனாக மட்டுமே நினைக்க முடிகிற ஒரு கிறித்தவ இசை மேதையைப் பற்றிய நாவல். அது ஒரு மேட்டிமை மனப்பான்மையின் குறியீடாக அமைக்கப்பட்டது. நாவலின் உச்சம், அந்த இசை மேதை ஜெர்மனிக்குச் சென்று தனது வாழ்நாள் கனவான சிம்ஃபொனி இசை வடிவம் ஒன்றை உருவாக்கி, நிகழ்த்திக் காட்டுவது.

உண்மையில் கதையில் அப்படி ஒரு சம்பவம் நிகழ்வதே இல்லை. நடக்காத ஒரு உச்சத் தருணத்தை, நடந்தேவிட்டதாக அவன் மனத்துக்குள் எண்ணிப் பார்ப்பதுதான் நாவலின் மையம்.

கதையின் அந்தக் குறிப்பிட்ட கட்டம் பெர்லின் நகரில் நிகழ்கிறது. பெர்லின் ஃபிலார்மொனிக் இசைக் குழு, அது சார்ந்த நபர்கள், சமகால இசை வல்லுநர்கள், கண்டக்டர்கள் பலர் கதைக்குள் வந்து போவார்கள். அனைவருக்கும் ஜெர்மானியப் பெயர்களையே கவனமாகக் கொடுத்திருப்பேன். சட்டென்று ஓரிடத்தில் அன்ஸெல் என்ற கதாபாத்திரம் நுழையும். ஓர் அத்தியாயத்துடன் அது காணாமல் போய்விடும். கதையில் எந்தத் திருப்பத்துக்கும் காரணமாக இல்லாத ஒரு சாதாரண பாத்திரம். கதாநாயகன், தன்னைக் கடவுளுக்கு நிகரான ஒரு நபராக உணர்பவன். இந்த அன்ஸெல் கதாபாத்திரம், ‘நீ கடவுளுக்கு ஒரு படி கீழே. ஆனால் மனிதர்களைக் காட்டிலும் மிகவும் உயரத்தில் இருப்பவன்’ என்று ஒரு வசனம் பேசும். அவ்வளவுதான்.

இந்நாவலை நான் என் நண்பரும் நான் மதிக்கும் எடிட்டர்களுள் ஒருவருமான ராஜேஷ் கர்காவிடம் எடிட் செய்யத் தந்திருந்தேன். இந்தக் குறிப்பிட்ட கட்டம் வந்தபோது அவர் கேட்ட வினா – “பெர்லின் ஃபிலார்மோனிக் சொசைடியில் எப்படி ஒரு அமெரிக்கன் இருப்பான்?”

ஒரு சரியான எடிட்டர் என்பவர் எப்படி இருப்பார் என்று புரிகிறதா? ஏராளமான ஜெர்மானியப் பெயர்கள் புழங்கும் ஓர் அத்தியாயத்தில் சம்பந்தமில்லாமல் ஒரு அமெரிக்கப் பெயர் வருகிறது. நமக்கு எல்லாமே வெள்ளைக்காரப் பெயர்கள்தாம். இருந்துவிட்டுப் போகட்டுமே என்று விட்டுவிட முடியாது. அந்நியப் பெயர்கள் நிறைய வருகிறதென்றால் அவற்றின் பூர்வீகம், தேசியம் அனைத்தையும் க்ராஸ் செக் செய்ய வேண்டும் என்று ஒரு சரியான எடிட்டருக்கு இயல்பாகத் தோன்றும்; தோன்ற வேண்டும். அதில் தொடர்பில்லாமல் ஒரு பெயர் குறுக்கிட்டால், அதன் காரணம் என்னவென்று கேட்டே தீர வேண்டும்.

ராஜேஷ் என்னிடம் கேட்டார். ‘எதற்காக அன்ஸெல் என்கிற அமெரிக்கப் பெயர்?’

அந்தக் கணம் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. நான் ஏன் அந்தக் கதாபாத்திரத்துக்கு வலிந்து ஒரு அமெரிக்கப் பெயரை அளித்தேன் என்பதை இறுதி வரை யாரும் கண்டுபிடிக்கப் போவதில்லை என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இன்று வரை, ராஜேஷைத் தவிர வேறு யாரும் அதைக் கண்டுபிடித்துக் கேட்கவில்லை என்பது வேறு. ஆயினும் தவறிக்கூட நாவலில் ஒரு தவறு வந்துவிடக் கூடாது என்ற அந்த கவனத்தை சிந்தித்துப் பாருங்கள்! எழுத்துக்கு எடிட்டிங் எவ்வளவு முக்கியம் என்பது புரியும்.

பிரச்னை இன்றைக்கு இம்மாதிரியான எடிட்டர்களைத் தமிழில் தேட வேண்டியிருப்பதுதான்.

விடுங்கள். அந்தப் பெயர்க் காரணத்தைச் சொல்லிவிடுகிறேன். அன்ஸெல் ஆடம்ஸ் என்பவர் உலகின் தலைசிறந்த புகைப்படக் கலைஞர்களுள் ஒருவர். அமெரிக்கர். நினைவை விட்டு அகலாத நூற்றுக் கணக்கான புகைப்படங்களைத் தந்தவர். நான் அவரது புகைப்படக் கலைக்கு ரசிகன். இறவான் நாவலின் கதாநாயகன், தன்னைக் கடவுளுக்கு நிகரான ஒரு உயிராகக் கருதுவான் என்று சொன்னேன் அல்லவா? நாவலில் எங்குமே அவன் அதை வாய் திறந்து சொல்லியிருக்க மாட்டான். தான் அப்படி நம்புவதை மிக நெருங்கியவர்களிடம்கூட வெளிப்படுத்தியிருக்க மாட்டான். ஜெர்மனியில் அவனைச் சந்திக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு பாத்திரம், அவன் பல காலமாக மனத்துக்குள் செதுக்கி வைத்திருக்கும் எண்ணத்தை அப்படியே புகைப்படம் போல எடுத்துக் காட்டுகிற கட்டம் வந்தபோது அந்தக் குறிப்பிட்ட பாத்திரத்துக்கு நான் அன்ஸெல் என்ற பெயரை வைக்க முடிவு செய்தேன். ஜெர்மனியில் யாரும் அந்தப் பெயரை வைப்பதில்லை என்பதையும் அறிவேன். இருப்பினும் என் விருப்பத்துக்குரிய ஒரு கலைஞனின் பெயரை அந்தப் பாத்திரத்துக்கு வைப்பதே பொருத்தம் என்று கருதிச் செய்தேன்.

இலக்கணத்தை நன்கு அறிந்த எழுத்தாளன் அநாயாசமாக அதனை மீற முடியும். அது துருத்திக்கொண்டு தெரியாது. இலக்கணத்தை அறிந்திருப்பதுதான் இங்கே முக்கியம். அதே போலத்தான் கலையிலும். ஒரு பிழையைத் தெரிந்தே செய்வதும் ஓர் அழகு. ஆனால் அது பிழைதான் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

பெண்கள் புடைவை கட்டும்போது கவனியுங்கள். பார்த்துப் பார்த்துக் கொசுவம் மடிப்பார்கள். மிகவும் கவனமாக அதை எடுத்துத் தொப்புளுக்குக் கீழே சொருகுவார்கள். யாரையாவது கூப்பிட்டுக் கொசுவத்தின் கீழ்ப்பகுதியை சரி செய்து தரச் சொல்லியும் கேட்பார்கள். அந்த விஷயத்தில் மட்டும் அவ்வளவு சரியாக இருப்பார்கள். ஆனால் மடிப்புகள் சரியாக வந்து இழுத்துச் சொருகிய பின்பு இடப்பக்கம் சிறிது வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் துணிப் பகுதியை அப்படியே சுருட்டி உள்ளே தள்ளுவார்கள் பாருங்கள்! புடைவைக்கே உச்சக்கட்ட அழகு தருவது அதுதான். அந்தப் பிசிறில் இருக்கிறது கலை.

ஆனால் எழுத்தைப் பொறுத்த வரை, தெரிந்து செய்ததோ, தெரியாமல் செய்ததோ – இங்கே பிழை இருக்கிறது, பிசிறு இருக்கிறது என்று சுட்டிக்காட்ட ஒரு எடிட்டர் தேவை. அவர் எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக இருக்க வேண்டியது எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியம்.

 

ராஜேஷ் கர்காவின் ஃபேஸ்புக் பக்கம்

வலைப்பக்கம்

5 thoughts on “நம்பகமான கொலைகாரன்”

  1. ஐயோ.என்ன இது.
    இப்படிப்பட்ட எடிட்டிங் இப்போது இல்லை என்றாலும் கனடென்ட்டுக்குள் ஊறிப்போகும் தன்மை எப்படி அவ்வளவு சுலபமாய் வரும்.
    ஆச்சரியமாக இருக்கிறது.

  2. பிரமிப்பாகவும் மலைப்பாகவும் இருக்கிறது.. தேனிலும் இனிய விஷயங்கள்.

  3. கும.சந்திரமோகன்

    எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக இருந்தால் தான் எழுத்து வசப்படுமா? தெரிந்து தவறு செய்வது என்பது தங்களின் இத்தனை வருட அனுபவத்தின் மேன்மை வெளிப்பாடு என கொள்ளலாம். நாங்களெல்லாம் வாசித்தாலும் கண்டறிய முடியாத,விஷயஞானம் குறைவான நிலையில் எழுதுவதே பிழையுடன் தானிருக்கும், பாட்ஷா பட வசனம் போல நாடி,நரம்பு, ரத்தம்,சதையெல்லாம் எழுத்து ஊறியவற்கு மட்டுமே சாத்தியமாகும் போலிருக்கிறது. சிருஷ்ட்டிக்கும் பிரம்மன் அல்லது வார்த்தைகளை கருவாக்கி பிரசவிக்கும் தாய் தாய்மை,வணங்குகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *